தஞ்சாவூர்

திருப்புறம்பியம் கோயிலில்  செப். 2-இல் தேனபிஷேகம்

28th Aug 2019 10:34 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோயிலில் பிரளயம் காத்த விநாயகருக்கு செப். 2ஆம் தேதி இரவு முழுவதும் தேனபிஷேகம் நடைபெற உள்ளது.
திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி கோயிலில் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இவர் தேனபிஷேக பெருமான் எனவும் அழைக்கப்படுகிறார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேனபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் மாலை தொடங்கும் தேன் அபிஷேகம் விடிய விடிய தேனால் மட்டுமே நடைபெறும். அபிஷேகம் செய்யப்படும் தேன், விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படும். இதனால், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவார்.
இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற பிரளயம் காத்த விநாயகருக்கு விழாக் குழுவினரால் 35 ஆம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா நாளான செப்.2-ம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தேனபிஷேக விழா தொடங்குகிறது. தொடர்ந்து, 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணி வரை தேனபிஷேகம் நடைபெற உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT