கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்டச் சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கி மக்கள் நீதிமன்றத்தில் பரோடா வங்கிக்கான வாராக்கடன் ரூ. 5.61 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது.
பரோடா வங்கியின் கும்பகோணம், வேப்பத்தூர் கிளையில் கல்விக் கடன், விவசாயக் கடன், சுய உதவிக் குழுக் கடன், சிறு தொழில் கடன் ஆகியவற்றை பெற்று குறித்த காலத்துக்குள் திரும்பச் செலுத்தாத பயனாளிகள் 460 பேருக்கு வங்கி மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு அனுப்பப்பட்டது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த வங்கி மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் முரளி, மன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், பரோடா வங்கிக் கிளை மேலாளர்கள் ராஜேஷ், ஜெகன்மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.இதில், பயனாளிகளின் வாராக் கடன்களின் மீது விசாரணையும் பரிசீலனையும் நடைபெற்றது. மொத்தம் ஒன்பது வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட தொகை மொத்தம் ரூ. 5,61,600. மக்கள் நீதிமன்றத்தில் கும்பகோணம் வட்டச் சட்டப் பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் வி. செல்வம், தன்னார்வ சட்டப் பணியாளர் எஸ்.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.