வேதாரண்யத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் சிலை ஆதிக்க சக்திகளால் உடைக்கப்பட்ட சமூக விரோதச் செயலைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், அம்பேத்கர் சிலை உடைப்பைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே. அபிமன்னன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், எம். மாலதி, என். சுரேஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். சரவணன், கே. காந்தி, மாநகரச் செயலர் என். குருசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், தமுஎகச மாநகரச் செயலர் பாரிசிவன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வி, சிஐடியு முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே. அன்பு, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் முருகேசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஜி. அரவிந்த்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.