தஞ்சாவூர்

உடையார்பாளையம் அருகே புத்தர் சிலை

27th Aug 2019 09:40 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள பிள்ளைபாளையத்தில் புத்தர் சிலை கண்டறியப்பட்டது.
ஆய்வாளர்கள் முனைவர் ம. செல்வபாண்டியன், க. ரவிக்குமார் ஆகியோருடன் மேற்கொண்ட களப்பணியின்போது இந்த புத்தர் சிலையினைக் கண்டதாகவும், அது வழிபாட்டில் உள்ளதாகவும் சோழ நாட்டில் பெளத்தம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற பா. ஜம்புலிங்கம் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாங்கள் மேற்கொண்ட களப்பணியின்போது, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில்  கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளைபாளையம் என்ற ஊரில் அழகான, அதிகம் சிதைந்த நிலையிலான புத்தர் சிலையைக் காணமுடிந்தது.  
கிராமத்து நடுவில் உள்ள பெரிய அரச மரத்தின் கீழ் இரு விநாயகர் சிலைகளுடன் இந்த புத்தர் சிலையையும் மக்கள் வழிபடுகின்றனர். இடுப்புப்பகுதி வரை மட்டுமே உள்ள, 97 செ.மீ. உயரமுள்ள இச்சிலையை 15 ஆண்டுகளுக்கு முன்பு, அருகிலுள்ள பாண்டியன் ஏரிக்குக் கரை கட்டும்போது கண்டதாகவும், அதை தற்போது வழிபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் உள்ள புத்தர் சிலைகளைப் போலவே இச்சிலை உள்ளது.
சுருள் முடியுடன் கூடிய தலையின் மேல் தீச்சுடர், சற்றே மூடிய கண்கள், மார்பில் ஆடை, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்புடன் உள்ள இச்சிலை இடுப்புப் பகுதி வரை மட்டுமே காணப்படுகிறது. சிலை கிட்டத்தட்ட பாதிக்குமேல் சிதைந்த நிலையில் உள்ளது.
வலது கை முற்றிலும்,  இடதுகை பாதிக்கு மேலும் உடைந்த நிலையிலும்,  தீச்சுடர்,  மூக்கு,  உதடுகள் சிதைந்த நிலையிலும் உள்ளன. சிதைந்த நிலையிலும் இச்சிலையை உள்ளூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். முனைவர் பட்ட ஆய்வுக்காகவும், தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிற களப்பணியின்போது அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, முத்து சேர்வை மடம், பெரிய திருக்கோணம், ராயம்புரம், விக்ரமங்கலம் ஆகிய இடங்களில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள புத்தர் சிலைகளைக் காண முடிந்தது. 
அவ்வகையில் இதன் அமைப்பினை நோக்கும்போது இதுவும் அமர்ந்த நிலையிலான சிலை என்பதை உறுதி செய்ய முடிகிறது. இது கி.பி. 10 - 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். சோழ நாட்டில் பெளத்தம் தழைத்து வளர்ந்திருந்ததை உணர்த்தும் சான்றாக இந்த புத்தர் சிலை உள்ளது என்றார் ஜம்புலிங்கம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT