வேதாரயண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
தஞ்சாவூர் ரயிலடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் ச. சொக்கா ரவி தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் கடைவீதியில் விவசாய விடுதலை தொழிலாளர் இயக்க மாநிலத் துணைச் செயலர் நாகப்பன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, திருப்பனந்தாள் கடைவீதியில் நீலப்புலிகள் இயக்க மாநில இளைஞரணி செயலர் சம்சுதீன் தலைமையில் 41 பேரையும், நாச்சியார்கோவிலில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் ஒன்றியச் செயலர் விஜய் ஆனந்த் தலைமையில் 25 பேரையும், பந்தநல்லூர் கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலர் முருகப்பன் தலைமையில் 35 பேரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலர் தமிழருவி, விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் க. பாலகுரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட நிர்வாகி ராஜசேகர் தலைமையிலும், மக்கள் அரசு கட்சியின் தலைவர் ராஜ்குமார் தலைமையிலும் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து கண்ணாடி உடைப்பு
திருப்பனந்தாள் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சீர்காழியிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசுப் பேருந்தை மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில், பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதில், காயமடைந்த பேருந்து ஓட்டுநர் ஜெயக்குமார் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் விசாரிக்கின்றனர்.