தஞ்சாவூர்

சென்னை இளைஞர் கொலை வழக்கு: ஒரத்தநாடு நீதிமன்றத்தில் 7பேர் சரண்

23rd Aug 2019 10:07 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூரில் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் ஒரத்தநாடு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். 
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர்லால் (32) என்பவர் ஒரு கும்பலால் புதன்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக,  தஞ்சாவூர் மாவட்டம்,  ஏழுப்பட்டி  கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் ராஜா (27), இனத்துக்கான்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25),  புதுகை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், நடுத்தெரு குளத்தூர் நாயக்கர்பட்டியைச் சேர்ந்த அருண்ராஜ் (20),  மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சந்தகுமார் (20), 
நாகை மாவட்டம்,  சீர்காழி பகுதி அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (28),  திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதி,  காந்தி சாலை ஜிகலாஸ்  நகரைச் சேர்ந்த பிரவீண்,  
சிதம்பரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமரன் மகன் சிவராஜ் ஆகிய 7 பேரும் ஒரத்தநாடு உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர்லாலுக்கும், தஞ்சை மாவட்டம் ஏழுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறைக்கு சென்றபோது நண்பர்களாகினர். 
சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் நட்பு தொடர்ந்த நிலையில், ஒரு பெண் தொடர்பாக நண்பர்களுக்குள் விரோதம் ஏற்பட்டுள்ளது.  இந்தப் பிரச்னையில் ராஜா தலைமையிலான கூலிப்படையினர் சங்கர்லாலை புதன்கிழமை வெட்டிக் கொன்றனர். சரணடைந்த 7 பேரையும் வரும் 28ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க  ஒரத்தநாடு உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT