தஞ்சாவூர்

ஓஎன்ஜிசி குழாய் பராமரிப்பு பணி: கதிராமங்கலம் வந்த இயந்திரங்கள்

23rd Aug 2019 10:07 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்காக இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் 17 ஆண்டுகளாக ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2017, ஜூன் 30ஆம் தேதி மேலவெளிப் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறியது. 
இதைத்தொடர்ந்து பல இடங்களில்  ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறியதால் மக்கள் அச்சமடைந்தனர். கதிராமங்கலம் பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து பலவிதமான போராட்டங்களைக் கிராம மக்கள் நடத்தினர். இப்போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து பலரை கைது செய்தனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்நிலையில், கதிராமங்கலம் மேலவெளியில் உள்ள ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு பகுதியில் பராமரிப்புப் பணிகள் செய்வதற்காக இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு பகுதியில் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் தெரிவித்தது:கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி ஆழ்குழாய்  கிணறு பகுதியில் பராமரிப்புப் பணி செய்வதற்காக இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 
ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் அப்பகுதியில் போலீஸார்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 26ஆம் தேதி பராமரிப்பு பணி தொடங்கும் எனத் தெரிகிறது. கதிராமங்கலத்தில் தற்போது எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT