தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் வழங்கப்படும் நீர்ப்பாசனக் கடன் திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்குப் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவிகித மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள, அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவிகித அரசு மானியம் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்போர் ஜாதி, வருமான, இருப்பிடச் சான்றுகளை இணைக்க வேண்டும். சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடைமைக்கு ஆதாரமாகக் கணினி வழிபட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகிப் பயன் பெறலாம்.