தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகிலுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான் கோயிலில், கோகுலாஷ்டமி உற்ஸவம் சனிக்கிழமை (ஆக.17) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயில் கொடிமரத்தில் சிறப்பு ஆராதனைகளுடன் கருடக் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறப்பு ஹோமமும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதில் கோயில் ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜகோபாலசாமி வனபோஜனமாக கோசாலை எழுந்தருளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து ஆக. 23-ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை சேங்காலிபுரம் ராம தீட்சிதரின் பாகவத சப்தாஹம் நடைபெறவுள்ளது. உற்ஸவ நாள்களில் நாள்தோறும் காலை பிரபோதனம், பாகவத சப்தாஹம், வேதபாராயணம், அஷ்டபதி பஜனை, மாலை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், இரவு சுவாமி புறப்பாடு ஆகிய வைபவங்கள் நடைபெறவுள்ளன.
ஆக. 23-ஆம் தேதி மாலை சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளி சேவை சாதிக்க, இரவு 10 மணி முதல் 12.30 மணி வரை பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் தலைமையில் நாம சங்கீர்த்தனமும், தொடர்ந்து கிருஷ்ண ஜனனம், சிறப்பு ஆராதனையும் நடைபெறவுள்ளது.
ஆக. 24-ஆம் தேதி காலை வெண்ணைத்தாழி உற்ஸவமும், மாலை புஷ்ப பல்லக்கில் புறப்பாடும், 25-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருக்கல்யாண வைபவமும் நடைபெறவுள்ளது.