தஞ்சாவூர்

லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் ஒருவர் கைது

11th Aug 2019 04:37 AM

ADVERTISEMENT


பேராவூரணி அருகே லாரி ஓட்டுநர் கொலை வழக்கில், 10 நாள்களுக்குப் பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பேராவூரணி அருகிலுள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கொளக்குடி குளத்தில், கடந்த 1- ஆம்தேதி  காயங்களுடன்  சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸார்  அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இறந்தவர் இடது மணிகட்டு, இடதுகால் வெட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததால், கொலை நிகழ்ந்து 4 நாள்களுக்கு மேல் ஆகலாம் எனக் கருதிய போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையை நடத்தினர்.
இந்த விசாரணையில் இறந்தவர் ஆவணம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த முகமது அன்வர் மகன் முகமது ரியாஸ் (43) என்பதும், வெளிநாட்டில் வேலை பார்த்து  அண்மையில் ஊர் திரும்பிய இவர், லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
புதுக்கோட்டை மாவட்டம்,  அணவயல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மீன் வியாபாரி வீரசிங்கம்  மகன் சேதுகுமார் ( 33 ) என்பவருக்குச் சொந்தமான லாரியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த முகமது ரியாஸ்,  கடந்த மாதம் பேராவூரணியில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு காங்கயத்திற்கு சென்றார்.
 அங்கிருந்து அரியலூர், மற்றும் ஆந்திரமாநிலம், சித்தூர் பகுதிகளுக்கு லோடு ஏற்றிச் சென்றுள்ளார். இந்நிலையில், லாரி உரிமையாளர் சேதுகுமாருக்கும், முகமது ரியாஸிக்கும்  தொழில் ரீதியிலான தகராறு ஏற்பட்டுள்ளது . 
இந்த நிலையில் புதுச்சேரியில் லாரியுடன் இருந்த முகமது ரியாஸை, சேதுகுமார்  தனது நண்பர்கள் மைதீன்,அமாணியுடன் தனது காரில் சென்று  சந்தித்துள்ளார்.  
அப்போது  அனைவரும் மது அருந்தியிருந்த நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது  கொலை செய்யப்பட்ட முகமது ரியாஸின் சடலத்தை,  தனது காரின்பின்பகுதியில் வைத்துக் கொண்டு ஆவணம் வந்த  சேதுகுமார் மற்றும் அவரது நண்பர்கள்,  அரைக்குறையாகப் புதைத்து விட்டுச் சென்றது தெரிய வந்தது.
மேலும், தனக்குத் தர வேண்டிய பணத்தை கொடுக்காமல் லாரியுடன் தலைமறைவானதால், ஆத்திரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து முகமது ரியாஸை கொலை செய்ததாக சேதுகுமார் விசாரணையில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சேதுகுமாரை கைது செய்த திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் உஷா தலைமையிலான போலீஸார், தலைமறைவாக உள்ள மைதீன், அமாணியைத் தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT