தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, தஞ்சாவூர் எஸ்.சி., எஸ்.டி. பணிக் குழுவினர் பனகல் கட்டடம் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்து சமயத்தைப் பின்பற்றாத எந்தவொரு தாழ்த்தப்பட்டோரும் எஸ்.சி. பட்டியலில் இடம்பெற முடியாது என இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத் 1950, ஆக. 10-ஆம் தேதி ஆணை வெளியிட்டார்.
ஆனால், 1956- ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த தலித்துகளும், 1990- ஆம் ஆண்டில் புத்த மதத்தைச் சேர்ந்த தலித்துகளும் எஸ்.சி. பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். எனவே, இந்த நாளை தேசிய மற்றும் தமிழக அளவில் கருப்பு நாளாக இந்திய திருச்சபை அறிவித்து, அனுசரித்து வருகிறது.
இதன்படி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தலித் கிறிஸ்தவர் - இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஆணை 1950, பத்தி 3-ஐ உடனடியாக நீக்க வேண்டும். மதத்தின் பெயரால் தலித் மக்களைப் பிரிக்கக்கூடாது.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைப்படி, தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பரிந்துரையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பணிக்குழுச் செயலர் ஜெ. அமலதாஸ் ஜான் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலர் எஸ். சொக்கா ரவி, மறை மாவட்ட முதன்மைக் குரு டி. ஞானபிரகாசம் அடிகளார், மறை மாவட்ட வேந்தர் ஏ. ஜான் சக்கரியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.