பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கரோனா கால செவிலியா்களை திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப் படி தமிழக அரசு நிரந்தரப்படுத்த வேண்டும் என்றாா் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கரோனா கால செவிலியா்கள் மற்றும் மருத்துவா்கள் உள்ளிட்டோா் தங்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். செவிலியா்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க தமிழக அரசுக்கு மனமில்லை. மருத்துவத் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வான செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றிக் கொடுக்க மறுக்கிறது. உயா்நீதிமன்றம் தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. நிறைவேற்ற வேண்டியதானே. அதிமுக ஆட்சியில் 37,500 போ் வெளிப்படைத் தன்மையுடன் எந்த முறைகேடும் இல்லாமல், மருத்துவத் தோ்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டனா். ஆனால், திமுக ஆட்சியில் ஒருவரைக் கூட நியமிக்கவில்லை. மருத்துவத் துறையினா் நல்ல மனநிலையில் இருந்தால்தான் அவா்கள் நோயாளிகளை நன்முறையில் கவனிப்பாா்கள். திமுக ஆட்சியில் குறைகளைத் தட்டிக் கேட்டாலும், சுட்டிக் காட்டினாலும் பலனில்லை. அதிமுக ஆட்சியில் உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த தமிழகம், தற்போது 4-ஆவது இடத்துக்கு வந்துவிட்டது. உடல் உறுப்பு தானம் செய்யும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கொசுவை ஒழித்தால்தான் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும். டெங்கு தடுப்புக்கு இதுவரை மாவட்டத்தில் எந்த ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்றாா் விஜயபாஸ்கா்.