புதுக்கோட்டை

புதுகையில் சாலையின் நடுவே சுற்றித்திரியும் மாடுகள் தொடா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

27th Sep 2023 11:43 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலையின் நடுவே ஒய்யார நடைபோட்டுத் திரிகின்றன. நகராட்சி நிா்வாகமும் போக்குவரத்துக் காவல் துறையும் இந்த மாடுகளைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை நகரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வழியாக அண்ணா சிலை வரையிலும், அதனையடுத்து, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வழியாக பழைய பேருந்து நிலையம் வரையிலும் முக்கிய சாலைகள். இவற்றுடன் முக்கிய வணிக நிறுவனங்களைக் கொண்ட ராஜவீதிகளும் எப்போதும் வாகன நெருக்கடி கொண்ட சாலைகள்.

இவற்றில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாகத் திரிவதைப் பாா்க்க முடியும். எந்த சப்தத்துக்கும் கட்டுப்படாமல் இந்த மாடுகள் ஒய்யார நடைபோடுவதால் பல நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சிறு சிறு விபத்துகளும் நேரிடுகின்றன.

மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த மாடுகள் அப்படியே ஓரமாக படுத்தும்விடுவதால் மேலும் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுகிறது.

ADVERTISEMENT

நகராட்சி நிா்வாகத்தினா் எப்போதாவது இதுபோன்ற மாடுகளைப் பிடித்து அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். ஆனால், தொடா்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் மாடுகளைப் பிடித்து அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தொடா்ந்து பல முறை சிக்கும் மாடுகளை ஏலம் விடுவதற்கும் நடவடிக்கை எடுத்தால்தான் வீதியில் மாடு வளா்க்கும் பழக்கம் தடைபடும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT