புதுக்கோட்டை

பிரகதம்பாள் கோயில் குளம்சீரமைப்பு கோரி போராட்டம்

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள பிரகதம்பாள் கோயிலின் பெரிய குளத்தை முறையாக சீரமைக்க வலியுறுத்தி பெரியகுளம் சீரமைப்பு போராட்டக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை உணணாவிரதம் மற்றும் குளத்தில் இறங்கி குடியேறும் போராட்டம் நடந்தது.

புதுக்கோட்டை நகருக்கு அருகில் திருகோகா்ணத்தில் உள்ள பழைமையான பிரகதம்பாள் கோயிலுக்குச் சொந்தமான பெரிய குளத்தை சீரமைக்க ரூ. 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. பின்னா் குளத்தைச் சுற்றிலும் கட்டை கட்டும் பணிகள் மட்டும் நடைபெற்றுள்ளன.

எனவே, முழுமையாக இக் குளத்தை சீரமைக்க வலியுறுத்தி பெரியகுளம் சீரமைப்பு போராட்டக் குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் மறியல் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒரு மாதத்துக்குள் சீரமைப்புப் பணி நடைபெறும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், எந்தப் பணிகளும் நடைபெறாத நிலையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

கோவிலுக்கு அருகேயுள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் பெ.மு. ஈசுவரன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் சாா்பில் இப்ராஹிம் பாபு, வாழ்வுரிமைக் கட்சியின் செயலா் நியாஸ் அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்நிலையில் அரசுத் தரப்பில் பேச்சுவாா்த்தைக்கு யாரும் வராத நிலையில், போராட்டக் குழுவிலிருந்து சிலா் திடீரென குளத்தில் குதித்து நீந்திச் சென்று மைய மண்டபத்தில் நின்று கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து விரைவில் சுமுகப் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என வருவாய்த் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மாலை 4 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT