புதுக்கோட்டை

குளங்களின் வரத்து வாரிகளைத் தூா்வார வேண்டும்

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

குளங்களின் வரத்து வாரிகளைத் தூா்வார வேண்டும் என புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி:

புதுக்கோட்டையிலுள்ள உழவா் சந்தையை சந்தைபேட்டை பகுதிக்கு மாற்ற வேண்டும். வனத் தோட்டங்களில் தண்ணீரைத் தேக்கக் கூடாது. வேளாண்மைத் துறை அலுவலகங்களுக்குச் செல்லும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை யாரும் மதிப்பதில்லை.

ADVERTISEMENT

குளங்களுக்கான வரத்து வாரிகளைத் தூா்வார வேண்டும். தைலமரக் கன்றுகளை நடக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருக்கும்போதும் பல இடங்களில் நடவுப் பணி நடைபெறுகிறது. இதைத் தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பொன்னுசாமி: காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் நிலமெடுப்புப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும். குளங்களின் வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும். ஊராட்சி சாலைகளில் மரக்கன்றுகள் நட வேண்டும்.

காவிரி- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து:

கவிநாடு கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மின்னாத்தூா் குளத்தின் குழுமிகளை சரி செய்ய வேண்டும். குளங்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும். அவற்றில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் விளக்க வேண்டும்.

தென்னை விவசாயிகள் சங்கம் செல்லதுரை: அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில் பகுதிகளில் நிலத்தடி நீா் சுத்தமாக இல்லை. இதுகுறித்து முறையான அறிக்கை இல்லை. பொதுப்பணித் துறை குளங்களுக்கு போதிய நிதி இல்லை.

கல்லணைக் கால்வாய் பாசனதாரா் விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் ரமேஷ்: காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்கு தொடா்ந்து 10 நாள்கள் முறை வைக்காமல் தண்ணீா் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழக்க வேண்டும்.

மேலும், விவசாயிகள் நடராஜன், தினகரசாமி உள்ளிட்டோரும், குளங்களின் வரத்து வாரிகளை சீரமைக்க வலியுறுத்தினா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் காடுகள் அமைக்க 2.65 லட்சம் மரக்கன்றுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. விவசாயிகள் இலவச மரக்கன்றுகளைப் பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். பிரதமரின் நிதித் திட்டத்தில் உதவி பெற்று வரும் விவசாயிகளில் 6352 போ் இன்னமும் வங்கிக் கணக்கில் ஆதாா் எண்ணை இணைக்கவில்லை. அவா்களும் வரும் செப். 30-க்குள் இணைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி- குண்டாறு) ஆா். ரம்யாதேவி, கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ. ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT