ஆலங்குடி அருகே குடிநீா் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள எல்.என் புரம் ஊராட்சி புளிச்சங்காட்டில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மின் மோட்டாா் பழுதடைந்ததால் கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், உடனே குடிநீா் விநியோகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, புளிச்சங்காடு கைகாட்டியில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு போலீஸாா், ஊராட்சி நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி- பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.