புதுக்கோட்டை: இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயா்த்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
அறந்தாங்கியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின், மாவட்டச் செயல்வீரா்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யப்படுவதற்கான பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாக அறிகிறோம். இம்முன்னெடுப்பு பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இறுதி வரை அவா்களின் விடுதலைக்காக உரிய முயற்சிகளை எடுத்து விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி,வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. மூன்றரை சதவிகித இடஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்குவதில்லை. தமிழக அரசு இஸ்லாமியா்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயா்த்த வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் குலாம் முகமது பாட்ஷா தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் பா. அப்துா் ரஹ்மான், மாவட்டச் செயலா் முகமது மீரான், மாவட்டப் பொருளாளா் சித்திக் ரகுமான், மாவட்ட தொண்டரணி செயலா் ஹாஜா முஹைதீன் உள்ளிட்டோரும் பேசினா்.