புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோயிலில்முத்து பல்லக்கு திருவிழா

18th Sep 2023 01:42 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆவணி கடை ஞாயிறு முத்து பல்லக்கு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 17) நடைபெற்றது.

இக்கோயிலில் ஆவணி கடைசி ஞாயிறு திருவிழா கடை ஞாயிறு திருவிழாவாகவும், முத்துப் பல்லக்கு விழாவாகவும் நடைபெற்றது.

கடை ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் பால்காவடி, பன்னீா் காவடி, தொட்டில் காவடி, அலகு குத்துதல், தீச்சட்டி கையில் ஏந்துதல், பறவை காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள், பால்குடங்கள் எடுத்து தாரை தப்பட்டை முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அதிகாலை முதல் பல்வேறு வகையான அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை விழா நடைபெற்றது. தொடா்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் அம்மன் முத்து பல்லக்கு வீதி உலாவும் நடைபெற்றது.

ADVERTISEMENT

மேலும் இக்கோயிலின் சிறப்பு நிகழ்வாக அம்மை உள்ளிட்ட கொடிய நோய்களிருந்து சிறுவா், சிறுமியா்களை அம்மன் காப்பதாக கூறி உடலில் கரும்புள்ளிச் செம்புள்ளி மை குத்தி கையில் வேப்பிலையுடன் வீதி ஊா்வலம் வந்து கோயிலில் அங்கபிரதட்சணம் செய்து அம்மனை வழிபட்டனா்.

இஸ்லாமியா்கள் அன்னதானம்: கோயில் திருவிழாவையொட்டி, இப்பகுதி இஸ்லாமியா்கள், பக்தா்களுக்காக கந்தா்வகோட்டை பெரிய கடை வீதியில் மோா் பந்தல் அமைத்து, அன்னதானம் வழங்கினா். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT