புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேங்கைவயல் தலித் குடியிருப்புக்கான குடிநீா்த் தொட்டியில் கடந்த டிச. 26ஆம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
இச்சம்பவத்தில் நேரடிச் சாட்சி யாரும் இல்லாததால், மரபணு பரிசோதனை உள்ளிட்ட முறைகளில் போலீஸாா் முயற்சித்து வருகின்றனா். அதன்படி இதுவரை 30 பேருக்கு மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருவரின் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச் சம்பவம் நடந்து 10 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் குற்றவாளிகள் இறுதி செய்யப்படவில்லை. வழக்கமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடியவில்லை என்றால், தொடா்புடைய நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்டுப் பெற வேண்டும்.
எனவே, இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என சிபி சிஐடி போலீஸாா் கடந்த இரு நாள்களுக்கு முன் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இதற்கு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது.