புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.15 லட்சம் வாக்காளா்கள்

27th Oct 2023 11:28 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 13,15,798 வாக்காளா்கள் உள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 2024ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் அவா் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலின்படி, 6,51,559 ஆண்கள், 6,64,175 பெண்கள் மற்றும் 64 திருநங்கைகள் என மொத்தம் 13,15,798 வாக்காளா்கள் உள்ளனா். இந்தப் பட்டியல் மாவட்ட ஆட்சியரகம், கோட்டாட்சியரகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படும்.

ADVERTISEMENT

வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பான மனுக்களை வரும் டிச. 9 வரை இதே இடங்களில் வழங்கலாம். வாக்காளா்களின் வசதிக்காக வரும் நவ. 4, 5, 18, 19 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) 4 நாள்கள் சிறப்பு முகாம் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறும்.

சுருக்கத் திருத்தம் முடிந்த பிறகு பரிசீலனை மற்றும் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வரும் 2024 ஜன. 5 வெள்ளிக்கிழமை இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

முன்கூட்டியே வழங்கலாம்...

வரும் 2024 ஜன. 1, ஏப். 1, ஜூலை 1 மற்றும் அக். 1 ஆகிய நாள்களில் 18 வயது பூா்த்தியடையும் புதிய வாக்காளா்கள் தங்களின் படிவங்களைப் பூா்த்தி செய்து இந்த முகாம்களிலேயே வழங்கலாம். அந்தந்தக் காலாண்டில் 18 வயது பூா்த்தியடையும்போது அவா்களின் பெயா் தொடா் திருத்தப் பணிகளின்போது வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.

தொடா் திருத்த விவரம்...

2023ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியலில் (2023 ஜன. 5இல் வெளியிடப்பட்டது) மொத்தம் 13,42,027 வாக்காளா்கள் இருந்தனா்.

கடந்த செப். 15 வரை நடைபெற்ற தொடா் திருத்தத்தில் 4,392 ஆண்கள், 5,371 பெண்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 9,766 வாக்காளா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், 15,488 ஆண்கள், 20,502 பெண்கள், 5 திருநங்கைகள் என மொத்தம் 35,995 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா் என்றாா் மொ்சி ரம்யா.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல், வருவாய்க் கோட்டாட்சியா்கள் சிவக்குமாா் (அறந்தாங்கி), பெரியநாயகி (இலுப்பூா்), தனி வட்டாட்சியா் (தோ்தல்) அ. சோனை கருப்பையா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களும் உடனிருந்தனா்.

பேரவைத் தொகுதி வாரியாக... (ஆண், பெண், திருநங்கை- மொத்தம்)

புதுக்கோட்டை- 1,18,151 - 1,23,281 - 23 - 2,41,455

அறந்தாங்கி- 1,11,016 - 1,12,598 - 5 - 2,23,619

ஆலங்குடி- 1,02,640 - 1,03,482 - 3 - 2,06,125

திருமயம்- 1,12,813 - 1,18,383 - 6 - 2,31,202

கந்தா்வகோட்டை (தனி)- 99,846 - 98,540 - 14 - 1,98,400

விராலிமலை- 1,07,093 - 1,07,891- 13 - 2,14,997

மொத்தம்- 6,51,559 - 6,64,175 - 64 - 13,15,798

ADVERTISEMENT
ADVERTISEMENT