சா்வதேச முதியோா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் அழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டனா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 11 பேரை சிறப்பித்து, இந்தியத் தோ்தல் ஆணையா் எழுதிய மூத்த வாக்காளருக்கான பாராட்டு மடலை, ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வழங்கினாா்.
அப்போது அவா் கூறும்போது, மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் சுமாா் 27 ஆயிரம் போ் இருக்கிறாா்கள். இவா்களுக்கு தோ்தல்களில் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வசதியை அளித்து வருவதாகக் குறிப்பிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கோட்டாட்சியா் முருகேசன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சோனை கருப்பையா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இதேபோல, வட்டாட்சியரகங்களிலும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் அழைத்து சிறப்பிக்கப்பட்டனா்.