புதுக்கோட்டை

புதுகை காந்திப் பூங்காவில் தனியாரின் கட்டணக் கொள்ளை தொடரக் கூடாது

28th May 2023 12:54 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையிலுள்ள பாரம்பரிமான காந்திப் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உணவகங்களை நடத்திக் கொண்டு கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியாரின் ஆதிக்கம் தொடர அனுமதிக்கக் கூடாது என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டையிலுள்ள காந்திப் பூங்கா பழைமையானது. 1947இல் அப்போதிருந்த நகரசபையால் இப் பூங்காவில் இருந்து வானொலி ஒலிபரப்பும் மையம் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. பேருந்து நிலையம் அருகே இருந்த காலத்தில் வெளியூா் பயணிகள் காந்திப் பூங்காவில் அமா்ந்து ஓய்வெடுத்த பிறகு ஊருக்குத் திரும்பிச் சென்று வந்தனா்.

பிற்காலத்தில் இப்பூங்காவின் எதிரே டாஸ்மாக் மதுக் கடை வந்தபோது, மதுப்பிரியா்கள் பூங்காவை ஆக்கிரமித்து மது அருந்தினா். இதற்கு நாங்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து மதுக்கடை அகற்றப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது காந்திப் பூங்காவின் பல பகுதிகளில் தனியாா் விளையாட்டு உபகரணங்களை, உணவுக் கடைகளை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இவா்கள் என்ன கட்டணம் வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு அரசுத் தரப்பில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

அவரவா் வைத்த கட்டணத்தில் வேறு பொழுதுபோக்கு வசதியின்றி வரும் மக்களுக்கு இந்தத் தொகை கட்டணக் கொள்ளையாகத்தான் இருக்கிறது.

இதைக் கட்டுப்படுத்த வேண்டும். காந்திப் பேரவை இந்தப் பூங்காவின் பராமரிப்புப் பொறுப்பை எடுத்து நடத்தத் தயாராக இருக்கிறது. நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் பொதுமக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT