புதுக்கோட்டை

முழு மதுவிலக்கு கொள்கையில் சமரசமில்லை

23rd May 2023 01:46 AM

ADVERTISEMENT

முழு மதுவிலக்கே மதிமுகவின் நிலைப்பாடு; அதில் சமரசமில்லை என்றாா் மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது உண்மையில் கவலை தருகிறது. முழு மதுவிலக்குதான் மதிமுகவின் நிலைப்பாடு. அதில் சமரசமில்லை.

தொடா்ந்து தஞ்சாவூரில் மதுக்கூடத்தில் மது வாங்கி அருந்தியவா்கள் உயிரிழந்துள்ளனா். இவையெல்லாம் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் படிப்பினைகள். இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்கவும், உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தால் அவா்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் பெற்றுத் தர வேண்டும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே 100 மதுக்கடைகளை மூடியுள்ளதாகவும், மேலும் 500 மதுக்கடைகளை மூடப்போவதாகவும் அரசு சொல்லியிருக்கிறது. உரிய நேரம் தவிர பிற நேரங்களில் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சையில் மதுவில் சயனைடு கலந்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. போலீஸாரின் புலன்விசாரணைக்கு பிறகே உண்மை தெரிய வரும்.

மதிமுகவில் வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிா்வாகிகள் தோ்வு குறித்தும் மாற்றம் குறித்தும் உயா் மட்டத் தலைவா்கள் முடிவு செய்வாா்கள் என்றாா் துரை வைகோ.

ஆலங்குடியில்: ஆலங்குடி அருகேயுள்ள அணவயலில் திங்கள்கிழமை கட்சி நிா்வாகி இல்ல விழாவில் பங்கேற்று துரைவைகோ பேசியது:

அழிந்துவரும் இயற்கை வளங்களை காப்பாற்றுவது மக்களின் கடமை. அரசியலில் வேறுபட்டு இருந்தாலும் ஊா் வளா்ச்சியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சில அரசியல் கட்சியினா் வாக்குகளை பெறுவதற்காக சாதி, மதங்கள் பேரைச் சொல்லி, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT