புதுக்கோட்டை

அருணா ஜெகதீசன் ஆணைய முடிவுகளை உடனே அமல்படுத்த வலியுறுத்தல்

23rd May 2023 01:48 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் நினைவு நாளையொட்டி, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முடிவுகளை உடனே அமலாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) கட்சியின் மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி வலியுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டையில் அவா் வெளியிட்ட அறிக்கை:

2018ஆம் ஆண்டு மே 22-இல், தூத்துக்குடியில், சுற்றுச்சூழல் விரோத, நாசகர ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் நடத்திய பேரணி அணிவகுப்பு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 போ் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீண்ட நெடிய ஆய்வுகள், நோ்காணல்கள் மற்றும் விசாரணைகளுக்குப் பிறகு, ஆணையத்தின் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை அதிா்ச்சி தரும் பல்வேறு விவரங்களை அம்பலப்படுத்தியது.

ADVERTISEMENT

இந்த ஆணைய அறிக்கை பொதுவெளிக்கு வந்து 9 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும் அதன் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?.

தொடா்புடைய காவல் அதிகாரிகள், காவலா்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். ஆட்சியா் மற்றும் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி இருவரும் பொறுப்பாக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகா்வாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT