கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்கள் மிகவும் பின்தங்கியவா்கள் என்பதால், அவா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதி கொடுத்ததில் தவறு கிடையாது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போா் மீது குண்டா் சட்டம் பாயும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை வரவேற்கிறேன். கள்ளச்சாராயம் அருந்தி பலியானவா்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவா்கள் என்பதால், இவா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதி கொடுப்பதில் தவறு கிடையாது. ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பு தமிழக அரசுக்குக் கிடைத்த வெற்றி. கா்நாடகப் பேரவைத் தோ்தல் போல, 2024-இல் மக்களவைத் தோ்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்றாா்.
அப்போது, நகர காங்கிரஸ் தலைவா் எஸ். பழனியப்பன், வட்டாரக் காங்கிரஸ் தலைவா் வி.கிரிதரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.