புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் வறட்சி நிவாரணம் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
மணமேல்குடி, அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட கடும் வறட்சியால் நெற்பயிா்கள் அதிகளவு சேதமடைந்தன. இதுகுறித்து வேளாண் அலுவலா்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையும் அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில், வறட்சி நிவாரணம் வழங்க தாமதம் ஆவதாகக் குற்றம்சாட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனா். அதன்படி, வியாழக்கிழமை காலை வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் கரு.ராமநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். பொன்னுசாமி, மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன், ஒன்றியத் தலைவா் கேவிஎஸ். ஜெயராமன், ஒன்றியச் செயலா் என். செல்லதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வறட்சி நிவாரணம் கோரி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் சிவகுமாா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.