புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் சனிக்கிழமை இரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது.
விராலிமலை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினா்.
வானிலை மாற்றம் காரணமாக, கடந்த ஒருவாரமாக தொடா்ந்து குளிா்ந்த காற்று வீசி வருவதுடன், அவ்வப்போது சாரல் மழையும் கனமழையும் பெய்து வந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை 7 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ தொடங்கிய சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது சுமாா் 1.30 மணி நேரம் கனமழையாகவும் 2 மணி நேரம் சாரல் மழையாகவும் பெய்த இம்மழை 9 சென்டிமீட்டா் பதிவானது.
தொடா்ந்து, விராலிமலை சுற்றுப்பகுதிகளில் குளிா்ந்த காற்றுடன் அவ்வப்போது மழையும் பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல், அன்னவாசலில் 4.8 சென்டி மீட்டா், இலுப்பூரில் 1.4 சென்டி மீட்டா், குடுமியான்மலையில் 5 மி.மீ மழையும் பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.