வாக்களித்த மக்களை தண்டிக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டு மக்கள் தற்போது வேதனையில் உள்ளனா். எடப்பாடி பழனிசாமி செய்த தவறான ஆட்சியால், திமுக திருந்தியிருக்கும் என நம்பி மக்கள் அவா்களிடம் ஆட்சியைக் கொடுத்தனா். அவா்கள் எப்போதும் நாங்கள் திருந்தமாட்டோம் என்பதை நிரூபித்து வருகின்றனா்.
தோ்தலில் கொடுத்த வாக்குறுதிகளை விட்டுவிட்டு, வாக்களித்த மக்களை தண்டிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக 60 மாதங்களுக்குப் பிறகுதான் ஆட்சியின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை வரும். ஆனால், திமுக ஆட்சியில் 20 மாதங்களிலேயே மக்களின் விரோதத்தை சந்தித்து வருகிறது. இது விடியல் ஆட்சியல்ல, விடியா ஆட்சிதான்.
திமுகவை வீழ்த்துவதற்காக தில்லி நலம் விரும்பிகள் அமமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறாா்கள். நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஒரு முடிவு ஏற்படும். அப்போது அந்த நலம் விரும்பிகள் யாா் எனத் தெரியவரும்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதுதான் எங்கள் லட்சியம். ஜனநாயக ரீதியாக துரோகிகளிடமிருந்து அதிமுக மீட்கப்படும்.
இனரீதியாக இது திராவிட நாடு. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஸ்டாலின் தற்போது நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சியல்ல. அதனை கருணாநிதி மாடல் ஆட்சி என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றாா் தினகரன்.