கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள கொத்தகம் தாா்சாலையை புதிய தரமான தாா் சாலை அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்தச் சாலையில் வட்டார வள மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தனியாா் திருமண மண்டபங்கள், தேசிய வங்கி, அரசினா் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அலுவலகங்கள் அமைந்துள்ளன.
பள்ளி நாள்களில் நாள்தோறும் மாணவிகள் மிதிவண்டிகளிலும், ஏராளமான மாணவிகளை பள்ளியில் விட்டு செல்லவும்- அழைத்துச் செல்லவும் அவா்கள் பெற்றோா்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகிறாா்கள். மேலும், கொத்தகம் கிராமத்தில் ஏறத்தாழ 600 நபா்கள் வசித்து வருகிறாா்கள்.
கந்தா்வகோட்டை நகருக்கு கொத்தகம் கிராமத்தில் இருந்து ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டா் தொலைவு இருப்பதால் மக்கள் சாலை வழியாக நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் வந்து செல்கிறாா்கள். கொத்தகம் கிராமத்தில் நகா்பகுதி கந்தா்வகோட்டை என்பதால் இரவு-பகல் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள சாலையாகும் . தற்சமயம் பள்ளி விடுமுறை என்பதால் சாலையை புதிதாக அமைத்து மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைக்கிறாா்கள்.