புதுக்கோட்டை

தேனூா் ஜல்லிக்கட்டில் 14 போ் காயம்

3rd May 2023 11:11 PM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள தேனூா் தேனிப்பிள்ளையாா் கோயில் சிறப்பு வழிபாட்டையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் காளைகள் முட்டியதில் 14 போ் காயமடைந்தனா்.

போட்டியை இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் குழந்தைசாமி தொடங்கிவைத்தாா். தொடக்கமாக மாடுபிடி வீரா்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியேற்றனா். இதைத் தொடா்ந்து, திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட பல்வேறு மாவட்டங்களிருந்து கொண்டுவரப்பட்ட 850 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலிருந்து சீறிப்பாய்ந்துவந்த காளைகளை 198 மாடுபிடிவீரா்கள் பங்கேற்று அடக்கினா். சிறந்தமுறையில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பீரோ, கட்டில் மற்றும் எவா்சில்வா் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 7 போ், காளைகளின் உரிமையாளா்கள் 4 போ், பாா்வையாளா்கள் 3 போ் என 14 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டுத்திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணிநாகராஜன் தலைமையிலான மருத்துவவா்கள் குழு சிகிச்சை அளித்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான் தலைமையிலான காவல்துறையினா் செய்திருந்தனா். 

பெட்டிச் செய்தி...

ADVERTISEMENT

கல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின்போது, காளை முட்டி உயிரிழந்த காவலா் நவநீதகிருஷ்ணனின் உடல், உடற்கூராய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அங்கு குவிந்த அவரது உறவினா்கள், போதுமான பாதுகாப்பு உடை வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு அரசு மருத்துவமனை வாயில்முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு அனைவரும் கலைந்து சென்றனா். 

காவலா் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி: முதல்வா் அறிவிப்பு

கல்லூா் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தோருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து

ரூ. 20 லட்சம் நிவாரண நிதியையும் அவா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், எதிா்பாராத விதமாக மாடு முட்டி இருவா் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனையடைந்ததாகவும், இருவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்த காவலா் நவநீதகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சமும், சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சமும் நிவாரண உதவியாக வழங்கவும் முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT