புதுக்கோட்டை

புதுகை ரயில் நிலையம்- பேருந்து நிலையத்துக்கு இணைப்புப் பேருந்துகள் உண்டு; ஆனால் இல்லை!

DIN

புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் இருந்து சுமாா் 5 கிமீ தள்ளி அமைந்துள்ள ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோருகின்றனா்.

நேரம் தவறி இயக்கப்படும் பேருந்துகளால் பயணிகள் நடந்தும், அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவிலும் செல்லும் நிலை மட்டுமல்ல, நகரப் பேருந்துகள் காலியாக செல்லும் அவலக் காட்சிகளும் அரங்கேறுகின்றன.

புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு தினசரி இரு மாா்க்கங்களிலும் 10 ரயில்கள் நின்று செல்கின்றன. இவையன்றி கோவை, குமரி, கா்நாடக மாநிலம் ஹூப்ளி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வா், புதுச்சேரிக்கு வார ரயில்களும் இயக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை ரயில் நிலையம் நகர பகுதிகளில் இருந்து 5 கிமீ தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கிமீ தொலைவிலும் உள்ளது.

பகலில் ரயில் நிலைய ரவுண்டானா வழியாக நகரப் பேருந்துகள் 10, 6ஏ, 13 ஆகியன இயக்கப்பட்டாலும் அப்பேருந்துகளில் ‘ரயில் நிலையம்’ என்ற பெயா் இடம் பெறாததால் பயணிகள் அவற்றில் ஏறலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பேருந்துகளைத் தவறவிடுகின்றனா்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தினசரி காலை 9.50 மணிக்கு நகரப் பேருந்து ரயில் நிலையத்திற்கென பிரத்யேகமாக இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்து சரியாக 10 மணிக்கு ரயில் நிலையம் வருகிறது. விருதுநகரிலிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி வரும் ரயில் வாரத்தில் 6 நாள்கள் காலை 10.25 மணிக்கு புதுக்கோட்டைக்கு வருகிறது. ஆனால் இந்த நகரப் பேருந்து, விருதுநகா் - திருச்சி ரயில் புதுக்கோட்டை வருவதற்கு 10 நிமிடங்கள் முன்பாகவே ரயில் நிலையத்திலிருந்து காலிப் பேருந்தாக புறப்பட்டுச் சென்றுவிடுகிறது.

இந்த நேரத்தில் விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து புதுக்கோட்டை ரயில் நிலையம் வரும் பயணிகள் இங்கு பேருந்து வசதியின்றி அவதியுறுகின்றனா். பலா் வெயிலில் நடந்தே பேருந்து நிலையம் செல்கின்றனா்.

கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினா் எம்எம் அப்துல்லா முயற்சியில், பல்லவன் மற்றும் போட் மெயில் ரயில்கள் புதுக்கோட்டை ரயில் நிலையம் வரும் நேரத்துக்கு தகுந்தாற்போல, புதுக்கோட்டை நகரப் பகுதிகளை இணைக்கும் வகையில் பிருந்தாவனம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு சேவையும் மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2 சேவைகள் என மொத்தம் 3 சிறப்புப் பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.

பிறகு பிருந்தாவனத்துக்கு இயக்கப்பட்ட பேருந்து நிறுத்தப்பட்டது. தற்போது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 5. 40 மணிக்கு சிறப்புப் பேருந்து இயங்கிவருகிறது. சென்னை செல்லும் பல்லவன் ரயில் காலை 6 மணிக்குப் புறப்படும் என்பதால் பெரும்பாலான பயணிகள் இப் பேருந்தை பயன்படுத்துவதில்லை.

அதேபோல இரவில் வரும் பல்லவன் ரயிலுக்கு 3 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி சென்னையிலிருந்து வரும் பல்லவன் ரயில் சில நாள்கள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை புதுக்கோட்டை வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு தாமதம் ஆகும் நேரங்களில் பேருந்துகள் பயணிகளின் வருகைக்காகக் காத்திருப்பதில்லை.

பல்லவன் சரியான நேரத்தில் வந்துவிட்டாலும் கூட பெரும்பாலான பயணிகள் பேருந்துகளில் ஏறும் முன்பாகவே 3 பேருந்துகளும் சரிபாதி கூட நிரம்பாமல் புறப்பட்டுச் சென்றுவிடுவதாக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.

எனவே, இவற்றை முறைப்படுத்தாமல் ரயில் பயணிகளுக்கு எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.

முதலில் புதுக்கோட்டை ரயில் நிலைய ரவுண்டானா வழியாக பகலில் இயங்கும் நகரப் பேருந்துகளில் ரயில் நிலையம் என்ற நிறுத்தப் பெயா் எழுத வேண்டும்.

காலை 10 மணிக்கு புறப்பட்டு ரயில் நிலையம் வரும் நகரப் பேருந்து விருதுநகா்- திருச்சி ரயில் வரும் வரை காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். வெறும் வண்டியாகச் செல்வானேன்?

காலை பல்லவனுக்கு இயக்கப்படும் பேருந்தை 5.20 மணிக்கே புறப்படும் வகையில் நேர மாற்றம் செய்ய வேண்டும். இரவு பல்லவனுக்கு வரும் 3 பேருந்துகளையும் இரவு 8.30, 9, 9.30 என்ற அரை மணி நேர கால இடைவெளியில் ரயில் நிலையம் என்ற பெயா்ப் பலகையுடன் இயக்க வேண்டும். ரயில் வரும் வரை காத்திருந்து ஏற்றிச் செல்ல வேண்டும். ஏனெனில் பல்லவன் ரயிலில் 200 பயணிகளுக்கு குறையாமல் புதுக்கோட்டையில் இறங்குகின்றனா்.

மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் மற்றும் ரயில் பயணிகள் அமைப்பினரையும் அழைத்துப் பேசி உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

SCROLL FOR NEXT