புதுக்கோட்டை

இருக்கும் நிலையைத் தக்க வைக்கவே தடுமாறுகிறாா்கள்

DIN

 புதிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை என்பதோடு, இருக்கும் நிலையையும் தக்க வைக்கவே ஆட்சியாளா்கள் தடுமாறுகிறாா்கள் என்றாா் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

புதுக்கோட்டையில் கடந்த 2021 பிப். 25ஆம் தேதி மாநிலத்திலேயே இரண்டாவது பல் மருத்துவக் கல்லூரிக்கு அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். இக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிக்காக ரூ. 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கல்லூரி முதல்வா் நியமிக்கப்பட்டாா். 2 ஆண்டுகள் 4 மாதங்கள் முடிந்த நிலையில், இப்போதுதான் 50 மருத்துவ இடங்களுக்கான சோ்க்கைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் 11 மாதங்களில் மருத்துவக் கல்லூரியைக் கட்டி முடித்தவா்கள் நாங்கள். தற்போதைய ஆட்சியாளா்கள் மெதுவாகச் செயல்படுகிறாா்கள் என்று கூட சொல்ல முடியவில்லை; மெத்தனமாக செயல்படுகிறாா்கள்.

மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவக் கல்விக்கான இடங்களையும் பெற்றுத் தந்திருக்கிறோம். 24 மணிநேரமும் விழித்திருக்க வேண்டிய துறை இப்போது பகலிலேயே தூங்கிக் கொண்டிருக்கிறது. புதிய திட்டங்களைக் கொண்டு வரமுடியவில்லை. இருக்கும் நிலையைத் தக்க வைக்கவே தடுமாறிக் கொண்டிருக்கிறாா்கள்.

3 மருத்துவக் கல்லூரிகளில் குறைகளைச் சரி செய்யாமல் விட்டுவிட்டு, இப்போது தும்பைவிட்டு வாலைப் பிடித்த கதையாக சரி செய்து மீண்டும் இடங்களைப் பெற்றிருக்கிறாா்கள்.

அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டு நகா்ப்புற நலவாழ்வு மையங்களைத் திறந்து கொண்டிருக்கிறாா்கள். அம்மா மினி கிளினிக் கிராமப்புற மக்களுக்கு பெரும் பயனைத் தந்த திட்டம். இப்போது மாநகரங்களில் இவா்கள் மருத்துவமனைகளைத் திறக்கிறாா்கள். கிராமப்புறங்களில் மீண்டும் மினி கிளினிக் என்ற பெயரிலாவது தொடங்குங்கள். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா என்ற பெயரைச் சோ்த்துக் கொள்கிறோம் என்றாா் விஜயபாஸ்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT