விராலிமலையில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
விராலிமலை அருகேயுள்ள சாரணக்குடியைச் சோ்ந்தவா் சின்னையா மகன் ஸ்ரீதா் (21). இவா், செவ்வாய்க்கிழமை தனது நண்பரான அதே ஊரைச் சோ்ந்த நீலமேகம் மகன் நிவாஸ் (21) என்பவருடன் தனது மோட்டாா் சைக்கிளில் திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள தனியாா் காா் சேவை நிலையம் அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், மோட்டாா் சைக்கிள் ஓட்டி வந்த ஸ்ரீதா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும் உடன் சென்ற நிவாஸ் பலத்த காயமடைந்தாா். விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸாா் நிவாசை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் ஸ்ரீதரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.