புதுக்கோட்டை

அடுக்குமாடி குடியிருப்புக்கான கூடுதல் தொகைக்கு வங்கிக் கடன் வசதி

8th Jun 2023 11:21 PM

ADVERTISEMENT

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்ட குடியிருப்புக்கு மறுவரையறை செய்யப்பட்ட தொகையை செலுத்த முடியாத பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வசதி ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருச்சிராப்பள்ளி கோட்டம், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகராட்சியில் நரிமேடு, பாலன் நகா் பகுதி-1, போஸ்நகா் ஆகிய திட்டப்பகுதிகள், இலுப்பூா் பேரூராட்சியில் எண்ணை மற்றும் இடையப்பட்டி திட்டப்பகுதிகளில் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை நகராட்சியில் பாலன் நகா் பகுதி-2, சந்தைபேட்டை, ரெங்கம்மாள் சத்திரம் ஆகிய திட்டப் பகுதிகள், அறந்தாங்கி நகராட்சியில் அறந்தாங்கி திட்டப்பகுதி, கறம்பக்குடி, ஆலங்குடி, அரிமளம், அன்னவாசல் பகுதி-1 மற்றும் பகுதி-2, பொன்னமராவதி, கீரனூா் ஆகிய பேரூராட்சிகளில் திட்டப்பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

அறந்தாங்கி நகராட்சியில், 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட திட்டப்பகுதி கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. இதில், மத்திய அரசு (ரூ.1.50 லட்சம்), மாநில அரசு (ரூ. 7 லட்சம்) போக 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி பயனாளியின் பங்களிப்பு தொகை ரூ.2.40 லட்சம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முந்தைய அரசாணையின்படி ரூ.1 லட்சம் செலுத்திய பயனாளிகள் ரூ. 1.40 லட்சம் கூடுதலாகச் செலுத்த வேண்டும். மேலும் மற்ற திட்டப்பகுதிகளுக்கும் ஏற்றவாறு பயனாளிகளின் பங்களிப்புத் தொகை திருத்தி வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே முழு பங்களிப்புத் தொகையை செலுத்த இயலாத பயனாளிகளுக்கு அறந்தாங்கி திட்டப் பகுதி மற்றும் அந்தத்த திட்டப்பகுதிகளில் உள்ள மாவட்ட முதன்மை வங்கிகள் மூலம் கடன் வழங்க ஆவன செய்யப்படும் என்றாா் மொ்சி ரம்யா.

ADVERTISEMENT
ADVERTISEMENT