புதுக்கோட்டை

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்: குடியிருப்புகளுக்கு கூடுதல் தொகைக் கேட்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

6th Jun 2023 02:32 AM

ADVERTISEMENT

அறந்தாங்கியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு கூடுதல் பணம் செலுத்த அறிவுறுத்துவதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா், பயனாளிகளுடன் வந்து அளித்த மனு விவரம்:

அறந்தாங்கி நகராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள வீடு இல்லாத 120 குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 120 அடுக்குமாடிகள் கட்டப்பட்டன.

கடந்த 2022இல் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவரும் தலா ரூ. 1 லட்ச ரூபாய் கட்டினால்தான் வீடு தரப்படும் என்று வாரியம் கூறியதன் பேரில் கையில் இருந்த பொருள்களை அடமானம் வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அனைத்து பயனாளிகளும் பணம் செலுத்தி விட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், திடீரென ஜூன் 3ஆம் தேதி அழைத்து கட்டுமானப் பொருள்கள் விலை அதிகமாய் விட்டதாலும், மின்வாரியத்துக்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டி உள்ளதாலும், பயனாளிகளிடம் கூடுதலாக ரூ. 1.40 லட்சம் கட்டினால் தான் வீடு தரப்படும் என்று அதிகாரிகள் கூறினா். அடுக்குமாடிக் குடியிருப்புப் பயனாளிகள் இந்தத் தொகையைச் செலுத்த முடியாது. ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டிய தொகையுடன் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT