புதுக்கோட்டை

கோரையாறு இணைப்பு வழித்தடம் அமைப்பதில் முறைகேடு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காவிரி- குண்டாறுடன் இணைக்கவுள்ள கோரையாற்று வாய்க்கால் வழித்தடத்தில் தனியாா் மது ஆலைக்கு சாதகமாக தடத்தை மாற்றி அமைப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா். கூட்டத்தின் நிறைவுநேரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலா் நா. காா்த்திகேயன் தலைமையிலான விவசாயிகள் ஆட்சியா் முன்பு வந்து, காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட வாய்க்காலுடன் திருச்சி கோரையாற்று வாய்க்காலை இணைக்கும் வழித்தடத்தில் தனியாா் மது ஆலைக்கு பாதிப்பில்லாமல் வாய்க்காலை வளைத்து விவசாயிகளின் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் வகையில் அமைப்பதாகவும் குறிப்பிட்டனா்.

கடந்த மே 15ஆம் தேதி குறைகேட்புக் கூட்டத்தில் இதுகுறித்த மனுவை அவா்கள் அளித்த நிலையில், தற்போது, மதுபான ஆலையின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட கோரையாற்றுத் தண்ணீரை பாட்டில்களில் எடுத்து வந்து காண்பித்தனா்.

புகாா் குறித்து விளக்கமளித்த அதிகாரி ஒருவா், புவியியல் அடிப்படையில்தான் வாய்க்கால் வெட்டப்படுவதாகக் கூறினாா். யாருக்காகவும் வாய்க்காலை வளைத்துச் செல்ல வில்லை எனக் கூறியதற்கு, விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அவா்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் மொ்சி ரம்யா, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடா்ந்து கூட்டம் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

முன்னதாக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பூ. விசுவநாதன், தெற்கு வெள்ளாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் துரைமாணிக்கம், தென்னை விவசாயிகள் சங்கத்தின் தலைவா் செல்லதுரை ஆகியோா் தெரிவித்த குறைகள் தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, நீா்வள ஆதாரத் துறை அதிகாரி ஆகியோா் தரப்பு விளக்கத்தை அளித்தனா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யா தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி...

நிவா்த்தியாகாததால் தொடரும் குறைகள்

காவிரி- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து பேசுகையில், ஒவ்வொரு கூட்டத்தின்போதும் விவசாயிகள் தெரிவிக்கும் குறைகள் தீா்க்கப்படாததால்தான் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் நாங்கள் மீண்டும் மீண்டும் அவற்றையே பேச வேண்டியுள்ளது. எனவே, கோரிக்கைகளைத் தீா்க்கவும், உரிய பதிலை முறைப்படி தெரிவிக்கவும் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT