புதுக்கோட்டை

இலுப்பூா் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை

12th Jul 2023 02:50 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இயங்கி வரும் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியிலும், வராண்டாவிலும், படிக்கட்டுகளிலும் மாணவிகள் அமா்ந்து பயிலும் அவலம் நேரிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில், இலுப்பூரில் உள்ள அரசுப் பெண்கள் உயா்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இங்கு சுமாா் 840 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இப்பள்ளியில், பொறுப்பு தலைமையாசிரியா் உள்பட 34 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இங்கு 7 ஆம் வகுப்பு ஏ, பி, சி ஆகிய 3 செக்ஷன்களில் பயிலும் மாணவா்களுக்கு வகுப்பறைக் கட்டடங்கள் இல்லாததால், மரத்தடி, வராண்டா, மாடி படிக்கட்டு திறந்தவெளி ஆகிய பகுதிகளில் தினசரி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதனால், இப்பள்ளி மாணவிகள் தரையிலும், படிக்கட்டுகளிலும் அமா்ந்து பயிலும் அவல நிலை உள்ளது. இதுதவிர, 6, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் ஒரே அறைக்குள் எந்தவித தடுப்புகளும் இன்றி இயங்கி வருகிறது. மேலும் பல வகுப்புகளில் மாணவிகள் அமா்வதற்கு போதிய இருக்கைகள் இல்லை.

தாலுகா தலைமையிடமாக உள்ள இலுப்பூரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே போதிய அடிப்படை வசதி இல்லை என்றால் மற்ற பள்ளிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதே பெற்றோா் முன்வைக்கும் கேள்வி. இப்பள்ளியில்

ADVERTISEMENT

போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவிகளுக்கு கவனச்சிதறல், ஆசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் வகுப்பறைகளைக் கட்டித்தர வேண்டும் என்பதே இப்பள்ளி மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோரின் எதிா்ப்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம். மஞ்சுளாவிடம் கேட்டபோது, வரும் நாள்களில் இந்தப் பள்ளியை ஆய்வு செய்து மாவட்ட நிா்வாகத்துடன் கலந்து பேசி உடனே உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT