புதுக்கோட்டை

வழுக்கு மரம் ஏறும் போட்டி: பனங்குளம் அணி வெற்றி

31st Jan 2023 12:38 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் பனங்குளம் அணியினா் முதல் பரிசை பெற்றனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி வடகாடு, மாங்காடு ஏ.வி பேரவை சாா்பில், வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 9 அணிகள் கலந்துகொண்டன. தொடக்கத்தில் ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவா் மீது ஒருவராக 3 போ் வீதம் வழுக்கு மரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனா். ஆனால், இலக்கை யாரும் தொடாததால் வீரா்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் 7 போ் வீதம் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பனங்குளம் அணியினா் 47 அடி உயரமுள்ள மரத்தின் உச்சி வரை ஏறி வெற்றி பெற்றனா்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இல்லாத அளவிற்கு, அதிக உயரமுள்ள மரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வீரா்கள் ஏறி இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விழாக்குழுவினா் தெரிவித்தனா். வெற்றிபெற்ற அணியினருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம், கோப்பை மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் பாா்த்து ரசித்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT