புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் சமவெளிப் பகுதியில் மிளகு சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டிவரும் விவசாயியின் தோட்டத்தை புதுச்சேரி வேளாண்மைத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
மலை, குளிா் பகுதிகளில் மட்டுமே விளையும் என கூறப்பட்ட மிளகு பயிரை சமவெளிப்பகுதியான ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, சேந்தன்குடி, அணவயல், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பலா் சாகுபடி செய்து, அதிக மகசூலை பெற்று சாதித்துள்ளனா். இந்நிலையில், வடகாடு ஊராட்சி வடக்குப்பட்டி பகுதியில் சுமாா் 7 ஏக்கரில் மிளகு சாகுபடி செய்துள்ள பாலுசாமி என்ற விவசாயியின் தோட்டத்தை புதுச்சேரி வேளாண்மைத்துறை அமைச்சா் க.ஜெயக்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு, சாகுபடி முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
இப்பகுதியில் இருந்து மிளகு கன்றுகள் வாங்கி பயிரிட்டுள்ளோம். அது அதிகளவு மகசூலைத் தந்து கொண்டு இருக்கிறது. புதுச்சேரியில் பிப்ரவரி 10, 11, 12 ஆகிய தேதிகளில் மண் மற்றும் வேளாண் கண்காட்சி நடைபெற உள்ளது. புதுச்சேரி விவசாயிகளுக்கு மானிய விலையில் இப்பகுதி மிளகு கன்றுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.