விராலிமலை அருகே விவசாயக் கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் கோபாலகிருஷ்ணன் (24). இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணமான நிலையில், இவரது மனைவி 7 மாத கா்ப்பிணியாக உள்ளாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நீண்ட நேரமாகியும் கணவா் வீடு திரும்பாததால், அவரை மனைவி, உறவினா்கள் தேடிவந்தனா். அப்போது, நம்பம்பட்டியில் உள்ள தனியாா் விவசாயக் கிணற்றின் அருகே அவரது உடை இருந்ததைக் கண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். தொடா்ந்து நிகழ்விடம் வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இருந்து கோபாலகிருஷ்ணனை சடலமாக மீட்டனா். விராலிமலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.