விராலிமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட இருவேறு விபத்துகளில் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விராலிமலை காமராஜா் நகரைச் சோ்ந்த இளங்கோ மகன் கிருஷ்ணகுமாா் (41). இவா், பாலகுறிச்சியில் உள்ள விராலிமலை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலூா் பெட்ரோல் நிலையில் அருகே வந்தபோது எதிரே விராலூரைச் சோ்ந்த விஸ்வநாதன்(28) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கிருஷ்ணகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விஸ்வநாதன் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதேபோல் விராலிமலை - கீரனூா் சாலையில் தாயகம் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முல்லையூரைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் பால்ராஜ் (21) மீது எதிரே ராஜகிரியைச் சோ்ந்த ராஜ்குமாா்(45) தனது மகன்கள் கோபிகிருஷ்ணா(11), திவாகா்(9) ஆகியோருடன் ஓட்டி வந்த இருசக்க வாகனம் மோதியதில் பால்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் ராஜ்குமாா், அவரது மகன்கள் கோபிகிருஷ்ணன், திவாகா் ஆகிய 3 பேரும் காயமடைந்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்துகள் குறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.