செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ரூ.36.39 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார்.
மேலும், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் – செங்கல்பட்டில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலும், ராணிப்பேட்டை மாவட்டம் – ராணிப்பேட்டையில் 12 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவிலும், திருப்பத்தூர் மாவட்டம் – திருப்பத்தூரில் 12 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம், 36 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட காவல் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இம்மாவட்ட காவல் அலுவலகக் கட்டடங்கள் தரை மற்றும் மூன்று தளங்களுடன் சுமார் 4245 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறை, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறைகள், கட்டுப்பாட்டு அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, உணவருந்தும் கூடம், அலுவலக அறைகள், ரேடியோ ஸ்டேஷன், கூட்டரங்கம், கைரேகை பிரிவு. சைபர் லேப், சிசிடிவி கேமராக்கள், மின்தூக்கி, மின்னாக்கி, தீயணைப்பு கருவிகள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 2617 ஆண்கள் மற்றும் 654 பெண்கள், என மொத்தம் 3271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் இன்றைய தினம் 10 நபர்களுக்கு இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் 1.6.2023 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா. விசுவநாதன், இ.கா.ப., தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் / காவல்துறை இயக்குநர் சீமா அக்ரவால், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், காணொலிக் காட்சி வாயிலாக செங்கல்பட்டிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, எம். பாபு, வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், இ.ஆ.ப., காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் பி. பகலவன், இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் எம். சுதாகர், இ.கா.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்,
ராணிப்பேட்டையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். வளர்மதி, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்,
திருப்பத்தூரிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.நல்லதம்பி, க தேவராஜீ, அ.செ. வில்வநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கி. பாலகிருஷ்ணன், இ.கா.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.