தமிழ்நாடு

அரசை பயனாளியே மகிழ்வாய் சொல்வதை எப்படி சுட்டிக்காட்டாமல் தவிர்ப்பது? முதல்வரின் பதிவு

19th May 2023 03:40 PM

ADVERTISEMENT

 

அரசுத் துறை ஒன்றைக் குறித்து அதன் பயனாளியே மகிழ்வாய் சொல்லும் விந்தையை எப்படிச் சுட்டிக்காட்டாமல் தவிர்ப்பது? என்று எழுத்தாளர் சரவணன் சந்திரன் இட்ட பதிவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இணைத்திருக்கும் அந்தப் பதிவில், 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மாதங்களில் சமூகநலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாட்டை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தேன்.

தொடர்ந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் எனக்கு மனவேதனை அளித்தது. தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வயதுக்கேற்ற எடை, உயரமில்லாமல் மெலிந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாட்டின் குழந்தைகளைத் திடமானவர்களாக ஆக்கவேண்டும் என்ற உறுதியுடன் சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டத்தைக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில் அறிவித்தேன்.

ADVERTISEMENT

 

சில வாரங்களில், ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாமினை நீலகிரி மாவட்டம் முத்தோரை குழந்தைகள் மையத்தில் மே 21 அன்று தொடங்கி வைத்தேன்.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று #ஏற்றமிகு7திட்டங்கள்-இல் ஒன்றாக, #ஊட்டச்சத்தை_உறுதிசெய் திட்டத்தின்கீழ், 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 1 லட்சத்து 11 ஆயிரத்து 216 குழந்தைகளுக்குச் சிறப்பு உணவாக RUTF உணவு அளிப்பதையும், 6 மாதத்துக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 11 ஆயிரத்து 917 குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் கிடைப்பதை உறுதிசெய்யத் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்குவதையும் தொடங்கிவைத்தேன்.

இதன்படி ஊட்டச்சத்து உணவு, மருத்துவ உதவி வழங்கி இத்தகைய குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை எழுத்தாளர் சரவணன் சந்திரனின் இந்தப் பதிவு படம்பிடித்துக் காட்டுகிறது.

இதற்குக் காரணமான அமைச்சர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக - திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்திடுவோம் என்று பதிவிட்டு, சரவணன் சந்திரனின் முகநூல் பதிவையும் இணைத்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT