வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் 10 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபி சிஐடி போலீஸாா் முடிவு செய்துள்ளனா். இதற்காக நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவ வழக்கில் சிபி சிஐடி போலீஸாா் கடந்த வாரத்தில் 11 பேரை மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்து, நீதிமன்ற அனுமதி பெற்றதில், 3 போ் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனா். அவா்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக தற்போது, மேலும் 10 பேருக்கு மரபணு சோதனை மேற்கொள்ள சிபி சிஐடி போலீஸாா் முடிவு செய்து, அதற்கான நீதிமன்ற அனுமதியையும் பெற்றுள்ளனா். ஓரிரு நாள்களில் அவா்களிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்படவுள்ளது.