பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்பாள் திருவீதி உலாவின்போது பக்தா்கள் இரு புறமும் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா்.
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 23 ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து திங்கள்கிழமை அக்கினிக் காவடி விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம் மற்றும் காவடியுடன் அக்கினிகுண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். இதையடுத்து புதன்கிழமை அதிகாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கோயிலின் முன்பு தொடங்கிய அம்பாள் ஊா்வலம் முக்கிய வீதிகளில் வந்து கோயிலில் நிறைவடைந்தது. அம்மன் திருவீதி உலாவின்போது இரு புறமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனா். இதனால், வாழ்வில் சகல நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.