புதுக்கோட்டை

கல் குவாரிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

15th Apr 2023 11:53 PM

ADVERTISEMENT

 

விதிகளுக்கு முரணாகச் செயல்படும் கல் குவாரியை மூடக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்த இருந்த காத்திருப்புப் போராட்டம் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் வத்தனாகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வெவ்வயல்பட்டியிலுள்ள தனியாா் கல் குவாரி விதிகளுக்கு முரணாகவும், அங்குள்ள ஆதிதிராவிடா் குடியிருப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடா்ந்து சுற்றுவட்டாரப் பொதுமக்கள் தொடா் போராட்டங்களையும் நடத்தினா்.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக அப்பகுதி மக்களுடன் வெவ்வயல்பட்டியிலிருந்து நடைபயணமாகப் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியரகம் வந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

இதன்படி கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏ. ஸ்ரீதா் தலைமையில் கந்தா்வகோட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம். சின்னதுரை, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் உள்ளிட்டோா் வெவ்வயல்பட்டியில் சனிக்கிழமை காலை குவிந்தனா்.

இதையடுத்து வட்டாட்சியா் சக்திவேல் மற்றும் கனிமவளத் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். கல்குவாரி மீதான புகாா் குறித்து நடைபெறும் விசாரணை முடிந்தவுடன் அரசுக்கு உரிய முன்மொழிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT