விராலிமலை அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பா் லாரியைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசாா் வடுகப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகே திங்கள் கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி 3 யூனிட்டுகள் கிராவல் மண் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரான வானத்திராயன்பட்டியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் பிரசாந்த் மற்றும் உரிமையாளா் சிவஞானம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.