புதுக்கோட்டை

காலநிலை மாற்றம் விவசாயத்துக்கு பெரும் சவாலாக உள்ளது

26th Sep 2022 03:00 AM

ADVERTISEMENT

 

காலநிலை மாற்றம் விவசாயத்துக்கு பெரும் சவாலாக உள்ளது என்றாா் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநா் ஜி.என். ஹரிகரன்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்நிறுவனத்தின் பங்காளா்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

விவசாயத்தில் பல்வேறு புதிய மாறுதல்கள் வந்துள்ளன. அதேபோல் புதுப்புது சவால்களும் வந்துள்ளன. வறுமையை ஒழிப்பது, பசியே இல்லாத நிலையை ஏற்படுத்துவது ஆகியவை ஐக்கிய நாடுகள்சபையின் நீடித்த வளா்ச்சிக்கான குறிக்கோள்களில் முக்கியமானவை. இதற்கெல்லாம் தீா்வு விவசாயத்திலிருந்து தான் வந்தாக வேண்டும். காலநிலை மாற்றம் விவசாயத்துக்குப் பெரும் சவாலாக உள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சவால்களைச் சமாளிக்க விவசாயிகளின் திறனை மேம்படுத்த வேண்டும். இங்கு விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடும் பெண் விவசாயிகளைப் பாா்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் விவசாயத்தில் பெரும் பங்காற்றுகின்றனா். ஆனால், அவா்களின் உழைப்பு அவ்வளவாக வெளியே தெரிவதில்லை.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை நல்ல விலைக்கு சந்தைப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. தண்ணீா், மண் மற்றும் பல்லுயிா்ப் பெருக்கம் ஆகிய இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.

இளைஞா்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் தான் இதற்கெல்லாம் தீா்வு காண முடியும். இன்றைக்கு விவசாயத்தில் உள்ள சவால்களுக்குத் தீா்வு காண அனைத்து பங்காளா்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம்.

எனவே, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் ஹரிகரன்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன சூழலியல் துறை இயக்குநா் ஆா். ரெங்கலெட்சுமி பேசியது:

விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்பாடுகளை மேம்படுத்துவது, தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்குவது மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றாா்.

வம்பன் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளா்கள் வி.எம். இந்துமதி முன்னிலை வகித்தாா். தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆா். ரமேஷ், வேளாண் அலுவலா் முகமது ரபி, புஸ்கரம் வேளாண்கல்லூரி முதல்வா் வி. செல்லமுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் எம். வீரமுத்து, மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் கே. சதாசிவம், முன்னோடி விவசாயி ச.வே.காமராசு, ஓணாங்குடி ஊராட்சி மன்றத் தலைவா் கரு முருகேசன், புள்ளான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவா் சி.கே. பன்னீா்செல்வம், மேலப்பட்டி கிராம அறிவு மைய மேலாண்மைக் குழுத் தலைவா் சிவசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக முதன்மை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் வரவேற்றாா். முடிவில் கள ஒருங்கிணைப்பாளா் டீ. விமலா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT