புதுக்கோட்டை

முன்னாள் ஊராட்சித் தலைவா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை

20th Sep 2022 01:49 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அருகே உள்ளாட்சித் தோ்தல் மோதலில் முன்னாள் ஊராட்சித் தலைவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே கணபதிபுரத்தை சோ்ந்தவா் ஆனந்தராஜ் (49). முன்னாள் ஊராட்சித் தலைவா். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த எஸ்.இளையராஜாவுக்கும்(39) உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து, இளையராஜாவோடு சோ்ந்து சிலா் கடந்த 2012-ல் ஆனந்தராஜை வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளையராஜா, டி.முத்து(50), திருச்சியைச் சோ்ந்த கே.பாஸ்கா்(25), பி.மதன்குமாா்(26), கே. மாரியப்பன்(23) உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி பாபுலால் குற்றம்சாட்டப்பட்டவா்களில் இளையராஜா, முத்து ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

மேலும், பாஸ்கா், மதன்குமாா், மாரியப்பன் ஆகியோருக்கு தலா 1 ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT