புதுக்கோட்டை

விவசாயப் பணிகளுக்கு இயந்திரங்கள் பற்றாக்குறை

29th Oct 2022 12:06 AM

ADVERTISEMENT

விவசாயப் பணிகளுக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பற்றாக்குறை நிலவுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி: அண்டக்குளம் மின்வாரியப் பிரிவு அலுவலகத்தில் உதவிப் பொறியாளா் உள்ளிட்ட மின் உதவியாளா்கள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். 2021-22ஆம் ஆண்டு பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட அளவுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீடு கணக்கிடுவதில், வழங்குவதில், வெளிப்படைத்தன்மை இல்லை. இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்.

மாவட்டம் முழுவதும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் வாங்க இணையத்தில் விண்ணப்பித்து கடந்த 6 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு அவை கிடைக்கவில்லை. விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காத நிலையில் இயந்திரங்கள், கருவிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நமது மாவட்டத்துக்கு சிறப்பு ஒதுக்கீடு பெற்று பதிவு செய்துள்ள அனைவருக்கும் கருவிகளைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

கறம்பக்குடி வட்டம் கரு. கீழத்தெருவில் ஒரு மின்பிரிவு அலுவலகம் தொடங்க கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவு கிடைத்தும், இதுவரை அந்த அலுவலகம் கறம்பக்குடியிலேயே இயங்குகிறது. அதை உடனடியாக கரு. கீழத்தெருவுக்கு மாற்ற வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராமையன்: காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தஞ்சாவூா் காவிரி கட்டளைக் கால்வாயில் இருந்து புதிய வாய்க்கால் அமைத்து குன்றாண்டாா்கோவில், கந்தா்வகோட்டை, கறம்பக்குடி ஒன்றியங்களில் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

பயிா்க் காப்பீடு செய்துள்ள அனைவருக்கும் இழப்பீட்டுக்கு ஏற்ப காப்பீடுத் தொகை வழங்க வேண்டும். ஏரி, கண்மாய், வரத்து வாய்க்கால்களைத் தூா்வாரி நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

உரங்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை

கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 783.30 மி.மீ. ஆகும். 2022 அக்டோபா் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 565.70 மி.மீ.யைவிட கூடுதலாக 684.96 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. அதாவது 119.26 மி.மீ கூடுதலாக பெய்துள்ளது.

இடுபொருள்கள் இருப்பைப் பொறுத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 168 டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 56 டன் பயறு விதைகளும், 32 டன் நிலக்கடலை விதைகளும், 5 டன் சிறுதானிய விதைகளும், 3 டன் எள் விதைகளும், 0.680 டன் பசுந்தாள் உர விதைகளும் இருப்பில் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அக்டோபா் மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 4900 டன்களுக்கு, இதுவரை 3598 டன் யூரியா பெறப்பட்டுள்ளது. டி.ஏ.பி. உரம் 850 டன்களுக்கு 347 டன் வரப்பெற்றுள்ளது.

பொட்டாஷ் 710 டன்களுக்கு இதுவரை 278 டன் பெறப்பட்டுள்ளது. காம்ப்ளக்ஸ் 3315 டன்களுக்கு இதுவரை 1720 டன் பெறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது யூரியா 3731 டன்னும், டிஏபி 1111 டன்னும், பொட்டாஷ் 1019 டன்னும், காம்ப்ளக்ஸ் 4012 டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியாா் நிறுவனங்களில் இருப்பு உள்ளது.

விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 938 டன் யூரியா, 633 டன் டிஏபி, 368 டன் பொட்டாஷ், 1352 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, வேளாண் இணை இயக்குநா் சக்திவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (காவேரி- குண்டாறு) ஆா். ரம்யாதேவி, மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் சேகா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT